×

இந்திய டிஸ்கோ இசையின் மன்னன் என்று அறியப்படும் இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

மும்பை: இந்திய டிஸ்கோ இசையின் மன்னன் என்று அறியப்படுவாரும் பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளருமான பப்பி லஹரி காலமானார். உடல்நல குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த திங்கள் அன்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பப்பி லஹரி காலமானார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பப்பி லஹரிக்கு வயது 69. தபேலா வாத்திய கலைஞராக இசைப் பயணத்தை தொடங்கிய பப்பி லஹரியின் இயற் பெயர் அலுகேஷ் லஹரி என்பதாகும்.

டிஸ்கோ டான்சர், ஹிம்மத்வாலா, ஷராபி, அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டார்ஜான், டான்ஸ் டான்ஸ், சத்யமேவ் ஜெயதே, கமாண்டோ, ஆஜ் கே ஷஹேன்ஷா, தானேதார், நம்பி ஆத்மி, ஷோலா அவுர் ஷப்னம் போன்ற திரைப்படங்களுக்கு பப்பி லஹரி இசையமைத்துள்ளார். தமிழில் பாடும் வானம் பாடி படத்தின் மூலம் பிரபலமானார். இந்தியில் பப்பி லஹரி இசையமைத்த பாடல்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் இளைஞர்களை கட்டிப்போட்டன.மறைந்த பப்பி லஹரி இசையமைத்துடன் பாடல்களையும் பாடியுள்ளார். சில படங்களில் நடிப்பு திறமையையும் அவர் வெளிக்காட்டியுள்ளார். 2014ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், அதே ஆண்டு மேற்கு வங்கத்தின் ஸ்ரீராம்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை இழந்தவர். பப்பி லஹரியின் மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், பப்பி லஹரியின் இசை அனைத்தும் உள்ளடக்கிய பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதாக இருந்தது.தலைமுறை தலைமுறையாக மக்கள் பப்பி லஹரியின் படைப்புகளை தொடர்புபடுத்த முடியும்.பப்பி லஹரியின் கலகலப்பான இயல்பை அனைவரும் தவற விடுவார்கள். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது, என்றார்.


Tags : Puppy Lahari ,Modi , இசையமைப்பாளர் ,பப்பி லஹரி , மும்பை, மருத்துவமனை, காலமானார்
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...